இலங்கை
Typography

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான போராட்டத்தை கைவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இனி அது தொடர்பாகக் கதைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இதனால் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவால் மீண்டும் போட்டியிட முடியாது எனத் தெரிவிக்கப்படுவதைப் போன்று அவரால் போட்டியிட முடியுமென்ற கருத்துக்களும் நிலவுவதாகவும், இதனால் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இனி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாகக் கதைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இது தொடர்பாக சபாநாயகர் அறிவித்தல் விடுத்துள்ளார். அவரின் அறிவிப்பே இறுதியானது. இதனால் நாங்கள் எவ்வளவுதான் போராடினாலும் சபாநாயகரின் அறிவிப்புக்கு அப்பால் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றி கதைப்பதில் பிரயோசனமில்லை.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதும் நாட்டின் தலைவராக்குவதுமே எமது நோக்கமாக இருக்கின்றது. அதனை நோக்கி நாம் செல்வோம். இதேவேளை விஜேதாச ராஜபக்ஷ போன்ற சட்டத்தரணிகள் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதியாக முடியாது எனக் கூறினாலும், அதேபோன்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவே மீண்டும் அவரால் போட்டியிட முடியுமெனக் கூறுகின்றார். அத்துடன் சட்ட வல்லுனரான ஜீ.எல்.பீரிஸ் போன்றோரும் முடியுமென்றே கூறுகின்றார்கள். முடியாது எனக் கூறுவதைப் போன்று முடியுமெனக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். இதனால் இது தொடர்பாக நாம் குழப்பமடையத் தேவையில்லை. நீதிமன்றம் தீர்மானிக்கும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS