இலங்கை

வடக்கிலுள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு அங்குள்ள பொதுமக்கள் யாரும் கோரவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வலியுறுத்தி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய ராஜித சேனாரத்ன, இவ்வாறான தேவை வடக்கு முதலமைச்சருக்கு மாத்திரமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கிற்கு செல்லும் போது அவர்களை சந்திக்கின்ற பொதுமக்கள், தங்களுக்கு இருக்கின்ற பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களையே கோருகின்றனர். பல வருடங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் பாரிய அளவான பிரச்சினைகளாக இருக்கின்றன. மூன்று வேளை நிம்மதியாக உணவுக் கிடைத்திராத அளவுக்கு சிரமத்தில் பல மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு இருக்கின்ற காணிப் பிரச்சினை, காணாமல் போனோரின் பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றன.” என்றுள்ளார்.