இலங்கை

‘பொய் வாக்குறுதிகளைத் தந்து அரசாங்கம் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றி வருகின்றது’ என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் 'நீதியை நிலைநாட்டு, 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்களை வெளியிட வேண்டும்’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவண்ணம் கண்ணீர் மல்க தமது கவலையையும் ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தனர்.

மேலும், 30 வருட கால யுத்தத்தால் காணமால் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் வெளிப்படுத்தவில்லை, 'பொய் வாக்குறதிகளை தந்து அரசாங்கம் எம்மை ஏற்மாற்றுகின்றது’, 'காணாமல் ஆக்கப்பட்டோருக்கென கொண்டுவந்த ஆணைக்குழு பொய்யானது, அரசாங்கம் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றது.’ எனவும் கோசம் எழுப்பினர்.

காலை 10.30 மணியளவில் கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆரம்பமாகிய இந்த போராட்டம் 01.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. 11.15 மணியளவில் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி லோடஸ் வீதியினூடாக புறப்பட்டுச் சென்ற ஆர்ப்பாட்டக்குழு, லோடஸ் சந்தியில் வைத்து கலகமடக்கும் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் சம உரிமை இயக்கத்தின் இணைப்பாளர் ரவீந்ர முதலிகே தலைமையிலான குழு, ஜனாதிபதி செயலகத்துக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்க சென்றமை குறிப்பிடத்தக்கது.