இலங்கை
Typography

கடந்த காலங்களில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 05ஆம் திகதி காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. 

இதனை, காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உளரீதியான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை காணாமல் போனோருக்கான அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சாலிய பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலில் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.நா. சபையினால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் காணாமல் போனோருக்கான சர்வதேச தினம் இன்று இலங்கையிலும் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த நாட்டிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளனர் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமையினால், இலங்கை அரசாங்கமும் அதனை ஏற்றுக்கொண்டு, காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாகவே அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய வேதனையை நாமும் அறிவோம். அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் நாம் அறிவோம். நான்கு தசாப்தங்களாக இலங்கையில் காணாமல் ஆக்கப்படுத்தல் இடம்பெற்றுள்ளன. துரதிஷ்டவசமாக அதனை ஏற்காதவர்களும் நாட்டில் உள்ளனர்.

திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மூவினத்தைச் சேர்ந்தவர்களினதும் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளமை ஒரு மைல் கல்லாகும். காணாமல்போனவர்களின் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் போதல்களின் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும், என்றும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த வருட ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட பலவந்த காணாமல்போதல்களைத் தடுப்பதுதொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களைக் காணாமல்போனோர் அலுவலகம் முன்வைத்திருந்ததாகவும் கூறினார். பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வுக் பணிகளில் போதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விசாரணை செய்வதில் போதிய வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந் நிகழ்வில் பிரதான உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடுகம, காணாமல்போதல் மனித உரிமை மீறல் பிரச்சினை மட்டுமல்ல பாரதூரமான பிரச்சினையாகும். இதனை முழுமையாக நீக்க வேண்டும். சாட்சியங்கள் சரியான முறையில் இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களை தடுக்க முடியும். குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் தற்பொழுது காணப்படும் முறைமை சரியானதாக இல்லை. சிலர் இதை புரிந்துகொள்ளவும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசியல் அழுத்தங்களுக்கு தாங்கள் இடமளிப்பதில்லையென்றும் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்