இலங்கை

‘சமஷ்டி வேண்டாம் என்று நான் கூறவில்லை. சமஷ்டி வேண்டாம் என்று நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி திரிக்கப்பட்டவை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சமஷ்டி அரசியலமைப்பு எமக்குத் தேவையில்லை என நான் காலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாக ஊடகங்கள் பல தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன. இது, குறித்து சில பத்திரிகைகள் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்களே என விளக்கம் கேட்டார்கள். அவர்கள் எனது விளக்கத்துடன் இன்று செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனாலும், சில ஊடகங்கள் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்ளையே சமஷ்டியாகும். இந்த நிலையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு தேவையில்லை என நான் கூறியதாக செய்திகளை வெளியிட்டிருக்கும் பத்திரிகைகள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்.

புதிய அரசியலமைப்புப் பற்றி விளக்கமளிக்கும் கூட்டங்கள் தென்னிலங்கையில் நடைபெற்று வருகின்றன. காலியில் இடம்பெற்றது 7வது கூட்டமாகும். இது குறித்து தமிழ் மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், தமிழ் ஊடகங்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தக் கூட்டங்கள் புதிய அரசியலமைப்பு இற்த நாட்டுக்கு எவ்வளவு தூரம் அவசியமானது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தி மக்களுடைய ஆதரவுடன் அதனை பெற்றி பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.

அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதனை நாம் கூறுவதுடன், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் நிபுணர்களினால் மாதிரி வரைபாக கூறப்பட்டுள்ள விடயங்களையும் கூறி வருகின்றோம். அதிலும், சமஷ்டி என்கிற வார்த்தை இடம்பெறவில்லை. அதேபோல ஒற்றையாட்சி என்கிற வார்த்தையும் இடம்பெற்றிருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை தமிழ் மக்கள் மத்தியிலும் பல தடவைகள் நான் கூறியிருக்கிறேன்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கான இரண்டு குணாம்சங்கள் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். அதனை வரைபிலும் காண முடியும். வரைபில் சமஷ்டி என்கிற சொல்லடல் இருக்கக்கூடாது என்பதுடன், ஒற்றையாட்சி என்கிற சொல்லாடலும் இருக்கக் கூடாது என்பது எமது நிலைப்பாடு. ஆகவே, அவ்வாறான ஒரு ஒழுங்குமுறையினூடாகவே நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையிலேயே, சமஷ்டி தேவையில்லை என நான் கூறியதாக ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லை.” என்றுள்ளார்.