இலங்கை

‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனக்குழப்பத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதத்திலும் பொறுப்பாளியாக முடியாது’ என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

‘அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் 3 தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும், தற்போது 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆகவே நாட்கள் செல்லச் செல்ல தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளன. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.

பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக கண்டித்தவன் நான். அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள். மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் பாராளுமன்றத் தேர்தலில் வீட்டைவிட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறினார். அவர் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது.”என்றுள்ளார்.