இலங்கை
Typography

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வன்முறையைத் தூண்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரர் வி.தர்மலிங்கம் மற்றும் அமரர் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரது 33வது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, “சமஷ்டி தொடர்பில் காலியில் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையை விளக்கமின்ற பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.

மாகாண சபையில் அஸ்மின் முதலமைச்சருக்கு எதிராக சில வார்த்தைகளை பாவிக்கும்போது, விடுதலைப் புலிகள் பாணியில் முதலமைச்சர் அகற்றப்படவேண்டும் என்று அவர் சொன்னார். அவர் நீதியரசர் அல்ல. சட்டத்தரணியும் அல்ல. அவர் சொன்னதைச் சரியென்று சொல்லவில்லை. ஆனால், எங்களால் தெரிவு செய்யப்பட்டவர் முதலமைச்சர் மட்டுமல்ல, அவர் ஒரு நீதியரசர். சட்டத்துறையில் ஆற்றல் கொண்டவர் என்றுதான் அவரை நினைத்தோம். ஆனால், விடுதலைப் புலிகள் பாணியில் சுமந்திரன் அகற்றப்படவேண்டும் என்று அவர் சொல்கின்றார்.

முதலமைச்சர் வன்முறையைத் தூண்டுகிறார். சுமந்திரன் அந்த வார்த்தையை பேசவில்லை. முதலமைச்சர் கேள்வி பதில் எழுதுகிறார். இப்போது ஒரு தீர்ப்பையும் எழுதியுள்ளார். இது குற்றவியல் மிகுந்த கருத்து. மோசமான வன்முறை வார்த்தைகள். பொறுப்பற்று வன்முறையைத் தூண்டுகின்ற வார்த்தைகள். அவர் அவ்வாறு சொன்னது தவறு.

அஸ்மினுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம். முதலமைச்சருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம். விடுதலைப் புலிகள் சம்பந்தமான தீர்ப்புகளில் அவர் எப்படியிருந்தார் என்பது எமக்குத் தெரியும். சமஷ்டிக் கட்டமைப்பில் அச்சாணியாக இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் பேச்சு. பத்திரிகையை கிழித்துப் போடுவதெல்லாம் எமது தீர்மானம் அல்ல.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS