இலங்கை

கடந்த ஆட்சிக் காலத்தின் போது, நாட்டு மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு துப்பாக்கியால் பதில் சொன்னவர்கள், இப்போது ஆர்ப்பாட்டங்களை நடத்துவது வேடிக்கையானது என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு துப்பாக்கியால் பதிலளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாளை புதன்கிழமை இடம்பெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம், சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டத்துக்கு துப்பாக்கி பிரயோகம், மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிந்திருந்தார். அவ்வாறான ஒரு வரலாற்றை கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களை அழைப்பது வெட்கமானது, அவருக்கு வெட்கம் இல்லை என்பதே இதன் மூலம் புலப்படுகின்றது என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

கேகாலை வைத்தியசாலைக்கு மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த இந்த அரசாங்கத்துடனே மக்கள் இருக்கின்றனர். அடுத்த ஒரு வருட காலத்தில் கடந்த ஆட்சிக்காலத்தின் போது படுகொலைகள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு என்ன நடக்கும் என்பதை முழு நாடும் பார்க்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.