இலங்கை

“கூட்டு எதிரணி (மஹிந்த அணி) நடத்துவது மக்கள் ஆர்ப்பாட்டம் அல்ல. தமது குற்றங்களிலிருந்து விடுபடுவதற்காக நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கும் பலி பூஜையாகும்.” என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

“இன்று நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் மக்கள் ஆர்ப்பாட்டம் அல்ல. இது வெறுமனே திருட்டுக் கேடிகளின் ஆர்ப்பாட்டம். கொழும்புக்கு அழைத்துவரும் அப்பாவி மக்களின் ஒருவரையேனும் எம்மைக் கொண்டு பலி கொடுக்க வேண்டும் என்பதே கூட்டு எதிரணியினதும், நாமல் ராஜபக்ஷவினதும் திட்டமாகவுள்ளது. பலியை எமது பக்கம் திருப்பப் பார்த்தால் நாமல் பபாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்பதனை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ போன்று, நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்ப முடியாதவர்களே அவருக்கு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், “அவர்களுடைய பெயர்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. சர்வதேச மட்டத்தில் பணப்பரிமாற்றம் முன்னெடுத்த குற்றச்சாட்டுக்காக பிணையிலிருக்கும் சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷ விரைவில் விசேட நிதிமன்றத்துக்கு அழைக்கப்படவுள்ளார். இவற்றை கருத்திற்கொண்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே மஹிந்த ராஜபக்ஷவின் பேரில் இன்று இந்த பலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இன்று நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். அனைத்து விடயங்களும் இன்றைய தினம் வழமைபோலவே முன்னெடுக்கப்படும். எந்தவொரு தனி நபரதும் ஜீவனோபாயமோ இயல்பு நிலையும் பாதிக்கப்பட முடியாது. அவ்வாறு பாதிக்கப்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது. ஆனால் மக்களுக்கு ஆகக்கூடிய துன்புறுத்தலை வழங்குவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது.

நாமல் ஒரு முட்டாள் இளைஞர். வாழ்க்கையில் ஒரு புத்தகத்தையேனும் புரட்டாதவர். அவர் அண்மைக்காலமாக பிரபல்யமாகியுள்ள 'அரபு வசந்தம்' எனும் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் கூறப்பட்டுள்ளதைப் போன்று மக்களைக் கொண்டு ஆட்சி மாற்றம் செய்யப் பார்க்கிறார். எகிப்தில் ஆட்சி மாற்றத்தை செய்தது சிவில் சமூகம். அதில் அரசியல்வாதிகள் தலையிடவில்லை. அதற்கும் இதற்குமுள்ள வித்தியாசம் நாமலுக்கு தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரபலமான கதாபாத்திரம் என்பதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர் பெயரை வைத்து நாமல் ஆட்களைத் திரட்டி வந்து பலி கொடுக்கப்பார்க்கிறார். ஆட்சியை கவிழ்ப்பதல்ல அவருடைய நோக்கம் மாறாக நீதிமன்றத்திலிருந்து விடுபடுவதற்காக அழுத்தம் கொடுப்பதேயாகும்.

கூட்டு எதிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்த ஐந்து மைதானங்கள் இரத்துச் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. கொழும்பு நகர சபையிடம் நான் அதனை நேரில் கேட்டு உறுதி செய்தேன். அத்துடன் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு ஓர் இடம் போதாதா? எதற்காக ஐந்து மைதானங்கள் தேவைப்படுகின்றன?

எதிரணியினர் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால், எவருக்கும் அசெளகரியம் ஏற்படுத்தப்படக்கூடாது. காலிமுகத்திடல் வேண்டுமானால் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். கடந்த முறை வழங்கியதுபோல் இம்முறையும் வழங்கத் தயார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் எவருக்கும் வீதியிலிறங்கி அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதுவே ஜனநாயகம் என நாம் நம்புகின்றோம். என்றபோதும் அந்த ஆர்ப்பாட்டம் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது, எங்கே நடத்தப்படவுள்ளது என்பதனை முன்கூட்டி அறிவிப்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயமாகும். அப்போதுதான் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் வழங்க முடியும். ஆனால், எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் தற்போது வரை செய்தியாக மட்டுமே உள்ளது." என்றுள்ளார்.