இலங்கை

யுத்த காலத்தில் வடக்கில் புகைப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடி பொருட்களை அகற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருள்கள் அந்தப் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வெடிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்களை அகற்றும் பணி மிகவும் சிக்கலான நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் பிரதேசத்தில் 40 ஆயிரத்து 622 சதுர மீற்றர் நிலப்பரப்பு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 33 ஆயிரத்து 900 சதுர மீற்றர் பரப்பளவில் உள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்கள் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக அகற்றப்படும்.” என்றுள்ளார்.