இலங்கை

புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபை வழிநடத்தல் குழு ஏற்றுக்கொண்டது. 

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இதில், வழிநடத்தில் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்புக்கு நகல் வரைவாக பத்து நிபுணர்களின் குழு முன்வைத்த யோசனை வடிவம் நேற்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் அமைந்த அந்த யோசனைத் திட்டத்தில் முன்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்களே பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றன. அவை தொடர்பில் பல்வேறு கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்ட மாற்று யோசனைகள் தனியான ஒரு பின்னிணைப்பாகவும், நிபுணர் குழு பரிந்துரைத்த பல்வேறு விடயங்கள் இன்னொரு பின்னிணைப்பாகவும் சேர்க்கப்பட்டிருந்தன.

இந்த யோசனைத் திட்டத்தின் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்புகள் ஒரு வாரத்தில் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

அந்த மொழிபெயர்ப்புகளுடன், இம்மாதம் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றம் கூடும் சமயத்தில் வழிநடத்தல் குழுவை மீண்டும் கூட்டி ஆராய்வது என்றும், இந்த நிபுணர் குழுவின் யோசனைத் திட்டத்தை புதிய அரசமைப்புக்கான நகல் வடிவத்தின் முன் வரைவாகக் கருதி அதனை அரசமைப்புப் பேரவையாகக் கூடும் பாராளுமன்றத்திடம் சமர்ப்பிப்பது என்றும், அரசியலமைப்புப் பேரவை அதனை நகல் வடிவாக ஏற்றுக்கொண்டால் அதனடிப்படையில் விவாதங்களைத் தொடர்வது என்றும் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகத் தெரிகின்றது.

கூட்டு எதிரணி உட்பட சகல தரப்பினரும் சேர்ந்து இந்த இணக்கப்பாட்டுக்கு வந்தமை முக்கிய திருப்பம் என்று கருதப்படுகின்றது.