இலங்கை

பகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலனறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல்கலைக்கழக கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். பகிடிவதையால் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 வருடங்களில் பகிடிவதையால் சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்துள்ளதுடன், உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது. இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள எதிர்கால தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

உலகத்துடன் இணைந்து முன்னேறிச் செல்லும் நாடு என்ற வகையில் நாட்டின் கல்வித்துறையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களுக்கு கல்வித்துறை நிபுணர்கள் இன்னும் தயாராக இல்லை. பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படும் சில பாடசாலைகளுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்கள் உள்வாங்கப்படுவது பாடசாலைக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைய காரணமாகிறது. தொழிற்கல்வியில் உள்ள பாரம்பரிய முறைமைகளை மாற்றி புதிய உலகிற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் ஏற்றவாறு அதனை மேம்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.