இலங்கை

இலங்கை இறுதிப் போரின் போது 23,000 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

அத்தோடு, “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப் போரில் 4,000 முதல் 5,000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இறுதிப் போரின் உயிர்ச் சேதங்கள் குறித்தும் பேசினார்.

இறுதிப் போரில் 40,000 பேர் கொல்லப்படவில்லை எனவும், 7,000 அல்லது 8,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இதில் நான்கில் ஒரு வீதம் விடுதலைப் புலிகள் என்றும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு இறுதிப் போரை வழிநடத்திய, சரத் பொன்சேகா பதிலளித்தார்.

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 23,000 உறுப்பினர்களை இலங்கை இராணுவம் கொன்றது. மேலும் 12,000 பேரைக் கைது செய்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் ஒன்று இறுதிப் போர் நடந்த போது சேவையில் ஈடுபட்டிருந்தது. பாதிக்கப்படுவோரை இராணுவத்தின் பக்கம் கொண்டுவர அந்தக் கப்பல் பயன்பட்டது. போரின் இறுதி இரண்டு வாரங்களைத் தவிர அந்த கப்பல் சேவை தொடர்ந்து இயங்கியது.

அதனால், 30 – 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை. புதுகுடியிருப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட குறுகிய பிரதேசத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால், அந்தப் பிரதேசத்தில் எந்தவொரு இடத்தில் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்தினாலும், கொல்லப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் இருக்க வேண்டும்.
4,000 முதல் 5,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். காரணம், விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் பொதுமக்களே கடமையில் இருந்தனர். இறுதிப் போரில் ஒரு பெண்ணைக் கைது செய்திருந்தோம். அவர் ஓர் ஆசிரியை. ஆசிரியையுடன் மாணவர்களுக்கும் ஆயுதங்களை வழங்கி பதுங்கு குழிகளில் கடமைக்காக அமர்த்தியுள்ளனர். எனவே, பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம்.

அப்படி 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால், இராணுவம் முன்நோக்கிச் செல்ல தடையாக இருந்திருக்கும். இறந்தவர்களின் உடல்களை அகற்ற இராணுவம் இன்னுமொரு படைப் பிரிவை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். எனினும், அப்படியொரு நிலை ஏற்படவில்லை. 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது பொய்யான தகவல்.” என்றார்.

எந்தக் காலப்பகுதியில் இந்த 23,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்? என்று அவரிடம் கேட்கப்பட்டது, “இறுதிப் போரில்தான் இந்த 23,000 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 உறுப்பினர்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது. போர் நடந்த போது நாள்தோறும் புலிகளுக்கு ஏற்படும் இழப்புகளை இராணுவம் அலைவரித் தகவல்களை அனுப்பிவைத்தனர். இதன்மூலம் தான் இந்த எண்ணிக்கை உறுதியானது. இறுதிப் போர் நடந்த 2 வருடங்கள், 9 மாதங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன.” என்று பதிலளித்தார்.

பதுங்கு குழிகளில் ஆசிரியை உள்ளிட்ட பொதுமக்கள் இருந்ததாகக் கூறுனீர்கள்! அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களா? அல்லது பயிற்சியின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா? என்று கேட்கப்பட்டதற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பதிலளித்தார்.

அதில், “பதுங்கு குழிகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு குறுகிய கால ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. வயோதிக தாய், தந்தையருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதைப் போன்ற புகைப்படங்கள் அக்காலத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

அதேபோன்று பயிற்சிகள் வழங்கப்பட்டவர்களே இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தனர். ஆயுதத்தைப் பயன்படுத்தத் தெரியாத, கண்கள், காதுகள் சரிவர இயங்கும் ஒருவரை அவர்கள் பதுங்கு குழியில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பிற்கு ஆளணி பலம் கிடைத்திருக்கும். இவ்வாறு இறுதிப் போரில் அனைவரையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் உள்ளிட்டவர்களும் முன்னிலை பதுங்கு குழிகளில் இருந்து போர் செய்து இறுதி நேரத்தில் மாண்டதாகவே எமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. எனவே அனைவரையும் அவர்கள் போரில் ஈடுபடுத்தியதாகவே நான் கருதுகிறேன்.” என்று பதிலளித்துள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

“இலங்கை விடயத்தில் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல.” என்று சீனா தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை இரவு சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற எதிலிகள் படகு ஒன்று செனகல் நாட்டின் கடற்கரையில் மூழ்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.