இலங்கை

‘இலங்கையின் புதிய அரசியலமைப்பு கனடா உட்பட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.’ என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்தச் சந்திப்பில் கனடா உட்பட்ட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டியதன் அவசியத்தை இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கும் தனது நன்றியும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.