இலங்கை

“எமக்கு தனித்து ஆட்சியமைக்கும் பலமுண்டு. பலவீனமடைந்த நிலையில் தற்போது இருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. அதனால், அவர் தேவையற்று உளறுகிறார்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது தொடர்பிலும் பல கட்சிகளும், பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்பானது நகைச்சுவை அறிவிப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களினால் மேற்படி கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

“தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சக்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது. எமது கட்சியின் ஆசியுடனும், தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விட்டுக்கொடுப்பாலேயுமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, பலவீனமடைந்த நிலையில் தற்போது இருப்பதாலேயே எதைப் பேசுவது என்று புரியாமல் அவர் உளறுகின்றார்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.