இலங்கை
Typography

தங்கிவாழும் மனநிலையிலிருந்து விடுபட்டு சுய முயற்சியில் எழுந்திருக்க கூடிய தேசத்தை கட்டியெழுப்பும் பேண்தகு அபிவிருத்தி வழிகளில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி நிவாரண உதவி திட்டத்தின் கீழ் மேலும் ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒருவர் சுயமுயற்சியில் எழுந்திருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், அவரும் நாடும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும். இன்று நாட்டின் அபிவிருத்தியில் நிதி ரீதியாக எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

அரசாங்கம் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் அடைந்திருக்கும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இன்று சர்வதேசத்தின் அனுசரணை கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கைக்கு கடனுதவி வழங்கும் சில சர்வதேச நிறுவனங்களுடன் அண்மையில் தான் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இத்தகைய உதவிகளை தொடர்ந்தும் அதிகரிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் துறையிலும் அரசாங்க சேவையிலும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றினால், இந்த நாட்டிலுள்ளவர்களை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வது கடினமானதல்ல. மக்களின் வறுமையை இல்லாதொழித்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் பேதங்களின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS