இலங்கை
Typography

நிலைமாறுகால நீதி தொடர்பான நிகழ்ச்சி நிரலை அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மிக மெதுவான நகர்வையே முன்னெடுக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்செலே ஜெரியா விசனம் வெளியிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது கூட்டத்தொடர், நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. அத்தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்தக் கூட்டத்தொடரில், நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றி ஆராயும் ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் இலங்கை விஜயம் பற்றிய அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த பணிக்குழுவின் பிரதிநிதிகள், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, அறிக்கை தயாரித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக பதவிவகித்த,செயிட் அல்ஹுசைனின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அந்தப் பதவியை மிச்செல் பெச்செலே ஜெரியா, கடந்த 01ஆம் திகதி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் தன்னுடைய முதலாவது உரையை இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து நேற்று நிகழ்த்தினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில், அதிகாரிகள் நிலைமாறுகால நீதி தொடர்பான நிகழ்ச்சிநிரலை அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிக மெதுவாக நகர்வைக் கொண்டிருக்கின்றது. காணாமல் போனோர் அலுவலகம் அதன் ஆணையை நிறைவேற்றுவதற்கு கலந்துரையாடல்களையும் நிறுவன இயக்கத்தையும் தொடங்கியுள்ளது. இந்த அலுவலகம் விரைந்து வேலை செயற்படும் எனவும், காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு பதில்களை வழங்கத்தொடங்கும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல் என்பவற்றில் முன்னேற்றம் காணுதல் இலங்கையின் நீண்டகால உறுதிபாடு, செழிப்பு என்பவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இனவாத மற்றும் மீண்டும், மீண்டும் இடம்பெறும் இனரீதியான வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன. அத்தோடு, மரண தண்டனையை அமுலாக்குவதற்கான திட்டங்களும் இவ்வாறே கவலையளிப்பவையாக உள்ளன.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS