இலங்கை

“சிலர் பிரிந்து போக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு என்ற கருத்து வெளியில் வருகின்றது. எனினும், கூட்டமைப்பை எவராலும் சிதைக்க முடியாது.” என்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண சபை தன்னுடைய பதவிக் காலத்தில் கூடுதல் பணிகளைச் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று கூறியுள்ள அவர், “உரிய நேரத்தில் வடக்கு மாகாண சபைக்குரிய எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தனது தெரிவுகள் குறித்து வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னுடன் பேசலாம். சிலர் பிரிந்து போக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு என்ற கருத்து வெளியில் வருகின்றது. எனினும் கூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது. எவரும் என்னை வழிநடத்தவில்லை. தமிழ் மக்களின் நலன் கருதியே நான் செயற்படுகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். எமது பிரச்சினையில் இந்தியா அக்கறையாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை நாங்கள் எங்களுக்கு முரண்பாடான விஜயமாகப் பார்க்கவில்லை.”என்றுள்ளார்.