இலங்கை
Typography

“தமிழ் அரசியல் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுக்கான நீதியை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறதே தவிர, அரசைப் பணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டுவது தவறு.” என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. 

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக அவர்களது விடுதலையை வலியுறுத்தி ஒருங்கிணைய வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாள் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ளன. யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய தளபதிகள், யுத்தத்தை நடத்துவதற்கு தேவையான நிதி மற்றும் ஆயுத தளபாடங்கள் கிடைக்க மூல காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களை முன்நின்று மேற்கொண்டவர்கள் என யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்ட சுமார் 12,000 பேரை கடந்த அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளது.

அவர்கள் மீண்டும் தமது சமூக, பொருளாதார வாழ்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையும், கணிசமானோருக்கு நேரடி உதவிகளையும் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இருந்தும் சுமார் 100 பேரளவான முன்னாள் போராளிகளைத் தொடர்ந்து சிறைகளில் வைத்திருப்பது துயரமானதாகும்.

அவர்களில் பலர் திட்டவட்டமான எந்தவித குற்றச்சாட்டுக்கும் உட்படுத்தப்படாமல் வெறுமனே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அநீதியானதாகும்.

சிலர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தாலும் நீதிமன்ற விசாரணைகளை விரைந்து முடிக்காமல் அரசு காலத்தை இழுத்தடித்து அவர்கள் சிறைக் கொடுமைகளுக்குள்ளேயே வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கியுள்ளமை அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானதாகும்.

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இனங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கைகளை வளர்த்தல், நாட்டு மக்கள் அனைவரிடையேயும் அரச நிறுவனங்கள் மீது நல்லெண்ணங்களை உருவாக்குதல் போன்ற இலக்குகளுடன் முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இந்த முன்னாள் போராளிகளான அரசியல் கைதிகளின் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சிறைகளில் அரசியல் கைதிகளே இல்லை, பயங்கரவாதிகளே உள்ளனர் எனக் கூறுவது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. அதனது வாக்குறுதிகளுக்கும் உண்மையான கொள்கை நடைமுறைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளையே வெளிப்படுத்துகிறது.

சிறையிலுள்ள கைதிகள் சட்ட விரோதமற்ற முறையில் தமது அடிப்படை உரிமைகள் பற்றி அரசியல் சமூகத் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கும், தமக்கான நீதியை நிலைநாட்டும்படி கோருவதற்கும் அவர்கள் அமைதியான முறையில் தமது உணவை ஒறுக்கும் போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியேயில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்