இலங்கை

“இலங்கையில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லையேல், அதன் தாக்கத்தை உணர்வீர்கள்.” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இப்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை வெளிப்படைத்தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்த விரும்புகிறேன். அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு சட்ட ரீதியான அரசு அமைய வேண்டும். இந்த பிரச்சினைக்கு பொறுப்புடன் ஒரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணவேண்டும்.

இது அவர்களின் விடயம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால் பொருளாதார தாக்கங்கள் ஏற்படலாம். அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவகங்கள் மீது பாதிப்புக்கள் வரலாம். இந்த நெருக்கடி நிலைக்கு பின்னர் எதிர்காலத்தில் இலங்கை அதன் நட்புச் சக்திகளுடன் எப்படி நம்பிக்கையை கட்டியெழுப்ப போகின்றது என்பதும் இப்போதுள்ள முக்கிய கேள்வி.”என்றுள்ளார்.