இலங்கை
Typography

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன விரைவில் கூட்டணி அமைக்கும். அவ்வாறு அமைக்கப்படும் புதிய கூட்டணிக்கு மஹிந்த ராஜபக்ஷவே தலைமை வகிப்பார். அதனை எந்த சந்தர்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரோடு இணைந்து ஆலோசராக செயற்படமுடியும்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ளதாக கூறப்படும் புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவு, மற்றும் அந்த கூட்டணியின் தலைத்துவம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரகட்சி மாத்திரமல்ல, என்னுடைய கட்சியான ஜனநாயக இடதுசாரி கட்சி, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்பில ஆகியயோரது கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்தே கூட்டணி அமைக்கப்படும். எனவே இதன் தலைமைத்துவம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை மாத்திரம் எடுத்துக்கொள்ள முடியாது. மஹிந்த ராஜபக்ஷவினுடைய தலைமைத்துவத்தையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். எனவே அதனையே ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கு முயற்சித்தாலும் அது பாரிய சவாலாகவே அமையும். அத்துடன் மக்களும் மஹிந்தராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வழங்கவே தயாராக உள்ளனர். எனவே எந்த சந்தர்ப்பதிலும் யாருடன் கூட்டணி அமைக்கப்பட்டாலும், அதற்கு மஹிந்த ராஜபக்ஷவே தலைமையேற்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதனை ஏனைய தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டால் அனைத்து பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்