இலங்கை
Typography

“இலங்கை வாழ் தமிழ் மக்கள் உள்ளகமாகத் தமது சுயநிர்ணய உரிமையை நடப்பிப்பதற்கு உரித்துடையவர்கள் என்பதை இன்றைக்கு உலகம் ஏற்றிருக்கின்றது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மென்வலு என்பது கத்தியின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி ஆற்றப்படுவது. மென்வலுவினாலே அரசியல் உருத்துக்களை எப்போது வெல்லலாம் என்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. எங்களுடைய கோரிக்கை நியாயமானதாக இருக்கவேண்டும். அது நியாயமானது என்று உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்றைக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் உள்ளகமாகத் தமது சுயநிர்ணய உரிமையை நடப்பிப்பதற்கு உரித்துடையவர்கள் என்பதை உலகம் ஏற்றிருக்கின்றது. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அந்த நியாயமான கோரிக்கையை நாங்கள் ஜனநாயக வழியிலே பெற முயற்சிக்கின்றோம் என்பது காண்பிக்கப்படவேண்டும். ஜனநாயக வழியிலே அது கிடைக்காது என்று அழுத்தம் திருத்தமாக ஊடகவியலாளர் வித்தியாதரன் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

மென்வலுவை உபயோகித்து நாங்கள் இதைப் பெறுவதாக இருந்தால் ஆயுத பலத்தைக் காட்டவே கூடாது. அது மிகவும் முக்கியமான ஒரு நிபந்தனை. வன்முறை பிரயோகிக்கவே கூடாது. இரண்டையும் பாவித்துப் பெறுவது என்பது அது ஒரு காலகட்டம். ஓர் அழுத்தத்தைப் பிரயோகித்து பெறக்கூடிய உயரிய தீர்வைப் பெறுவது என்பது. அது ஒரு காலகட்டம். அதற்கான காலகட்டமும் இருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களும் வந்தன. அதை யார் தவறவிட்டார்கள் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும்.

மென்வலு ஊடாக சிங்கள மக்கள் மனம் மாறவேண்டும். அவர்கள் எம்மை முதலில் நம்பவேண்டும். நாமும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் செயலாற்றவேண்டும். அவர்களாகவே எமது உரிமை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற நிலைமையை ஏற்படுத்தவேண்டும்.

நான் கடந்த வருடம் 30 சிங்களக் கிராமங்களுக்குச் சென்று புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்களத்தில் பிரசாரம் செய்துள்ளேன். அதில் நான் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். நாடு பிளவுபடாது. உங்களுடைய உரிமைகள் எவற்றையும் நாம் பிடுங்கி எடுக்கவில்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைத்தான் கோருகின்றோம். மத்தியில் ஜனாதிபதியிடம் குவிந்துள்ள உரிமையை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும். அவ்வளவே. சிங்கள மக்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

நாம் மட்டுமல்லர். வடக்கு – கிழக்கு தவிர்ந்த 7 மாகாணங்களின் முதலமைச்சர்கள்கூட நிறைவேற்று அதிகாரமுறைமை ஒழிக்கப்படவேண்டும், அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்படவேண்டும். ஆளுநர் என்ற ஒரு பதவி இருக்கவே கூடாது என்று ஒப்புதல் அளித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஒப்புதல் அளித்த முன்னாள் முதலமைச்சர் இறுதியில் ஜனாதிபதியால் ஆளுநராக நியமிக்கப்பட்டு பதவிகூட வகித்தார். அதுவேறு.

கலாநிதி சிவகுமார் சொன்னார், பிராந்தியங்களின் ஒன்றியம். அதைவிட சிறந்த தீர்வு இருந்திருக்குமா என்று? இல்லை. அதைவிட சிறந்த தீர்வு கிடையாது. ஆனால் அது பாராளுமன்றத்துக்கு ஒரு நகல் வரைவாக – ஒரு சட்டமூலமாகக் கொண்டுவரப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை எதிர்த்தது. சிங்கள அரசை நாங்கள் குறைசொல்லலாமா? நாங்கள் சொல்கின்றோம் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் அதை எதிர்த்தது என்று. அது உண்மை. முதலில் எங்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்க வேண்டாமா? நாங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தோமா என்று? நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கு ஒருவர் தவறாமல் வடக்கு – கிழக்கில் எல்லாருமே சொல்கிறோம். அதைவிட சிறந்த தீர்வு கிடையாது என்று.

ஒஸ்லோ உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் சமஷ்டி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதிலிருந்து முதலில் விலகியவர்கள் யாவர்? இலங்கை அரசாங்கமா? இல்லையே!

இவ்வாறு எமது தீர்வைப் பெறுவதற்கு சிறப்பான சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நாங்களே தவறவிட்டுள்ளோம். நான் யாரையும் குறைகூறவில்லை. அந்தநேர சூழ்நிலை அவ்வாறே. இனி அவ்வாறான ஒரு தவறு இடம்பெறக்கூடாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்