இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். 

சுதந்திர கட்சியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மாகாண மட்டத்திலான அமைப்பாளர்களை அழைத்து சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல் தொடரில் ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்கி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளதுஇ இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் நல்லதல்ல. 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் முரணானதாகும். எனவே ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுகின்றவர்கள், அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நான் அது பற்றி தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளேன். விரைவாக மாகாண சபை தேர்தலை நடாத்தி மக்களின் வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த அமைச்சுக்களின் கீழ்வரும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர் சபை நியமிக்கப்படாதது குறித்து சில தரப்பினர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி விரல் நீட்டுகின்றனர். அது முற்றிலும் தவறான கருத்து. இந்த நிலைமைக்கு குறித்த அமைச்சுக்களே வகைகூற வேண்டும் என்பதுடன், குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்தினால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படாமையே இந்த தாமதத்திற்கு காரணமாகும். இதற்கான பொறுப்பை ஜனாதிபதி அலுவலகம் ஏற்றுக்கொள்ளாது. எவ்வாறானபோதும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர்கள் சபையை நியமிக்கின்றபோது அதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாகவே அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்