இலங்கை
Typography

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் தாம் அதனை முற்றாக நடைமுறைப்படுத்தப்போவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது எந்த விதத்திலும் அரசியலமைப்பு மீறலாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண மக்களின் அபிமானமாக இருப்பது கல்வி. ஆனால், போருக்குப் பின்னரான சீரழிவினால், தமிழ் மக்கள் இந்த நிலையில் இருந்து ஒன்பதாவது மாகாணம் என்ற நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இது ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இலங்கையருக்கும் கவலையளிக்கும் விடயம். எனவே, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஓர் அதிரடிக் குழுவை அமைத்து எல்லாக் கட்சிகளும் எந்தவிதக் கட்சி சார்பும் இல்லாமல், ஒன்று சேர்ந்து பணியாற்றி இந்த நிலையை மாற்றுவதற்காகத் துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

அடுத்ததாக விவசாயம். வடக்கு மாகாணம் என்பது 1980 வரையில் முழு இலங்கையிலும் 60% விவசாய உற்பத்தியைக் கொண்டதாக இருந்தது. எமது கலாசாரம் விவசாயக் கலாசாரம். விவசாயத்துடன் கலந்த ஒரு வாழ்வியலாக இருந்தது. அது இப்போது சீரழிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். அதோடு சம்பந்தப்பட்டதுதான் நீர்ப்பாசனம். ஆகவே, வடக்கு மாகாணத்தில் உள்ள எல்லாக் குளங்களையும் புனரமைக்க, 13வது திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாணத்திற்குக் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளையும் நடைமுறைப்படுத்துவதற்குத் துறை சார்ந்த அமைச்சுடன் இணைந்து செயலாற்றவிருக்கின்றோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்