இலங்கை
Typography

“புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் மற்றும் சட்ட அதிகாரம் கோரப்படுகின்றது. ஆனாலும், அதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஒருபோதும் ஆதரவளிக்காது.” என்று அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

கடந்த 3 வருடங்களில் நிறைவேற்ற முடியாதுபோன அரசியலமைப்பை, அடுத்த ஒன்றரை வருடங்களுக்குள் நிறைவேற்றக்கூடிய இயலுமை, தற்போதைய பாராளுமன்றத்துக்கு இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையிலிருக்கும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு, நடைமுறையில் இந்த நாட்டுக்குப் பொருத்தமற்றுள்ளதால், புதிய அரசியலமைப்பொன்றின் தேவை அவசியமாகியுள்ளது. என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உலக நாடுகளைப் போன்று, இலங்கையிலும் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, புதிய சமூகத்துக்கு பொருத்தமான அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசியலமைப்பினூடாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, சகலரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

2015ஆம் ஆண்டில், புதிய அரசியலமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2006ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போதும், அதற்குரிய முன்னெடுப்புகள் இடம்பெற்றன. அந்த அனைத்துச் சந்தர்பங்களிலும், ஜே.வி.பியின் பங்களிப்பு இருந்தது.

அதேபோல், அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட 21 பேர் அடங்கிய வழிநடத்தல் குழுவினால், ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் போனதன் காரணமாகவே, அக்குழுவின் அறிக்கையை இன்றுவரையில் வெளிபடுத்த முடியாமல் போயுள்ளது. குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க, மஹிந்த அணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே, புதிய அரசியலமைப்பு வடிவம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்டவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்