இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று இந்த ஆண்டு நிகழ வேண்டும் என்பதை இந்தியா விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “அதிகாரத்தைக் கைப்பற்றுவது, எங்களது பிரதான இலக்கல்ல. வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதும் எமது இலக்கல்ல. ஆனால், பாராளுமன்றத் தேர்தலே, இந்நாட்டுக்கு அவசியமானதாகும்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி வைத்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றபோதிலும், அதுவரையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்தால், நாடு முழுமையாக நாசம் செய்யப்படும். ஆகவே, பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு யோசனையொன்று கொண்டுவரப்பட்டால், அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கக் கூடாது. எமது ஆட்சியின்போது, 19ஆம் திருத்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவோம்.” என்றுள்ளார்.