இலங்கை
Typography

“சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை, இனப்படுகொலையா இல்லையா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புப் பற்றி பேச முடியும்.” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது கடந்தகாலத் தவறுகளை மறந்து செயற்படுவோம் எனக் கூறியிருந்தார். அத்துடன், கடந்தகாலத் தவறுகளை மன்னித்து மறந்து விடுங்கள். பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அபிவிருத்திகள் எனும் போர்வையில், உங்களுக்குப் பணம் தருகின்றோம், உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடி சமைக்கின்றோம். நடந்து போனதை மறந்து விடுங்கள் – மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார்.

இதன் அர்த்தம் என்ன? ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுவரை செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம்.

எனவே ஜெனீவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று பிரதமர் கூறிச் சென்றுள்ளார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால், அதற்கு அவர்கள் தயாராகி விட்டதாகவே தெரிகின்றது.

ஆனால் முதலில் சர்வதேச உதவியுடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை நடத்தி, இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புத் தொடர்பாக நாம் ஆராய முடியும்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்