இலங்கை

முட்டாள்தனமான வன்முறைகளால் பயன்பெறப்போவது பயங்கரவாதிகளே என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

“பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் செயற்பாட்டில் முப்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், வன்முறைகள் இடம்பெற்றால் அவற்றின்பால் பாதுகாப்புப் படையினரின் கவனம் சென்றவுடன் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “என்ன காரணத்துக்காக வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை எமது பாதுகாப்புத் தரப்பினர் தேடிக் கண்டுபிடித்து வருகின்றனர். அழிக்கப்பட்டு வரும் பயங்கரவாதம் மீண்டுத் தலைதூக்குவதற்கு வன்முறைகள் இடமளித்துவிடக் கூடாது. பயங்கரவாதிகளை அழிப்பதற்காகப் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில், வன்முறைகள் இடம்பெற்றால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமது கவனத்தை பாதுகாப்புத் தரப்பினர் திருப்ப வேண்டியிருக்கும். தம்மீதான கவனம் குறைந்ததும் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கலாம்.

80களில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்ட காரணத்தினாலேயே பெரும்பாலான தமிழர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சென்றனர். இவ்வாறான நிலையை முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்திவிடக்கூடாது. குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை சகல முஸ்லிம்கள் மீதும் சுமத்திவிட முடியாது. தேவையற்ற வன்முறைகளால் நாட்டைக் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் செயற்படுகின்றன. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.” என்றுள்ளார்.