இலங்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

“நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவும் இதுபோன்ற காலகட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும். எனது இக் கோரிக்கையை அவர்கள் செவிமடுப்பார்கள் என நம்புகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த சபாநாயகர் மல்வத்தை, அஸ்கிரிய, ராமன்ய நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து நல்லாசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்ட இதுபோன்றதொரு அடிப்டைவாத பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அவசியமாகும். அவ்வாறு நியமிக்கப்படும் ஜனாதிபதி ஆணைக்குழு நம்பிக்கை, ஒத்துழைப்பு நிறைந்ததாக இருப்பதுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

எதிர்வரும் வெசாக் தின உற்சவங்களை சீர்குலைப்பதற்காக சிலர் மறைந்திருந்து செயற்படுகின்றனர். அது பற்றிய தகவல்களை பாதுகாப்புத் தரப்பும் புலனாய்வுத்துறையும் வெகு விரைவில் வெளிப்படுத்தும்.

நாடு வழமைக்குத் திரும்புவதற்கு இடமளிக்காது நாட்டை முடக்குவதற்கு சிலர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம் பள்ளிகள் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கியமையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் மிகவும் பாரதூரமானது.

குளியாப்பிட்டி, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு கடந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் யாவும் வெசாக் தின வைபவத்தை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை. இதனால் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

எவ்வித குறைபாடுமின்றி பூஜைகள் மற்றும் சமய அனுஷ்டானங்களுக்கு முதலிடம் கொடுத்து இம்முறை வெசாக் தின நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையடுத்து மேலும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று வதந்திகள் உலாவிய போதும் அவை அனைத்தும் பாரிய பொய் என்பது உறுதியாகியுள்ளது.

இத் தாக்குதல் தொடர்பாக பௌத்தர் என்ற வகையிலும் இலங்கையர் என்ற வகையிலும் நாம் வெட்கப்படுகின்றோம். அப்பாவி முஸ்லிம் மக்களது உடைமைகளை அழிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் நிறுவனங்களில் சிங்களவர்களும் தொழில் செய்கின்றனர். 1983ஆம் ஆண்டு கலவரத்தின் போது நான் எனது வாகனத்தில் களனி விகாரைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு கும்பல் எனது வாகனத்தை நிறுத்தி சிங்கள இனத்தைப் பாதுகாக்க சிறிது பெற்றோல் தரும்படி கேட்டனர். அவர்கள் அவ்வாறு செய்வது சிங்கள இனத்தை அழிப்பதற்கு அன்றி பாதுகாப்பதற்கு அல்ல என்று அவர்களுக்கு நான் கூறினேன். இப்படியான செயல்களால் நாடு சிக்கலுக்கு மேல் சிக்கலில் மாட்டிக்கொள்வது தவிர்க்க முடியாது போய்விடும்.” என்றுள்ளார்.