இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் ஏமாற்றமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எனினும், பொது மக்கள் சார்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சரியான தீர்மானங்கள் தொடர்பாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமை ஜனாதிபதிக்கும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை. அவருக்கு எதிர்க்கட்சியின் கடமைகளை மாத்திரமே நிறைவேற்ற முடியும். நாட்டிலே தேசிய ரீதியில் முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தினுள் பிரேரணைகளை முன்வைத்தல் கருத்துத் தெரிவித்தல் மற்றும் அதற்கு வெளியே பொது மக்களை விழிப்பூட்டல் உள்ளிட்ட பணிகளை அவரால் மேற்கொள்ள முடியும்.

தற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்ற அமைதியற்ற நிலை சந்தேகம் மற்றும் அச்சம் என்பவற்றினை அகற்றுவதற்காக அன்னார் ஏற்கனவே ஊடகச் செய்திகள் மற்றும் வாய்மூல விளக்கமளித்தல்கள் என்பவற்றின் ஊடாக பொது மக்களை விழிப்பூட்டியுள்ளார்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS