இலங்கை

“முஸ்லிம்கள் தமது சமூகத்தில் உள்ள விடயங்களை சுய பரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். சிறு குழுவினர் செய்த காரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அளவிடக்கூடாது” என்று முஸ்லிம் தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். 

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிறியதொரு குழுவினர் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிறியதொரு குழுவினரே வன்முறைகளில் ஈடுபட்டனர். எனவே சிறியதொரு குழுவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் அளவிட முடியாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்களான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அமைச்சர் பதவி மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“முஸ்லிம் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மதரசாக்களை நிர்வகிப்பது குறித்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம் சமூகமே தானாக முன்வந்துள்ளது. இருந்தபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகள் அவர்களை பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது. முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே சுய பரிசீலனை செய்யத் தயாராகியுள்ளது. இதேபோல ஏனைய சமூகங்களும் தம்மைத் தாமே சுய பரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளனர்.