இலங்கை
Typography

சாட்சியங்கள் எதுவுமின்றி போர் விதிகளுக்கு முரணாக இலங்கை அரசு, இறுதிப் போரை முள்ளிவாய்க்காலில் நடத்தியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10வது ஆண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் என்பது இறுதிப் போரில் பெருந்தொகையான தமிழ் உறவுகள் அரச படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மண். தமிழ் உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்ட மண். தமிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் சாவைத் தழுவிய மண். விடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை ஆகுதியாக்கிய மண்.

இறுதிப் போரில் அரச படைகளின் பலவிதமான தாக்குதல்களினால் எமது உறவுகள் பலர் இந்த மண்ணில் சாகடிக்கப்பட்டனர். சாட்சியங்கள் எதுவுமின்றி போர் விதிகளுக்கு முரணாக இறுதிப் போர் இந்த மண்ணில் நடைபெற்றது.

மஹிந்த ஆட்சியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்பில் அப்போது நான் பாராளுமன்றில் பல உரைகளை ஆற்றியிருந்தேன். போரை உடன் நிறுத்தும்படியும் ஆட்சியில் இருந்த அரசைக் கேட்டிருந்தேன். ஆனால், தமிழ் மக்களுக்குப் பெரிய இழப்புகளைக் கொடுத்துத்தான் அரசு போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

பெருந்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். எமது மக்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு சர்வதேச சமூகத்தை இன்று நாம் கோரி நிற்கின்றோம்.

தமிழின அழிப்புத் தினமாகவும், தமிழ்த் தேசிய துக்க நாளாகவும் இன்றைய நாள் (மே 18) அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு பங்கேற்க வேண்டும். இறுதிப் போரில் இழந்த எமது உறவுகளை சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவுகூர வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் ஊடாக போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும்” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்