இலங்கை
Typography

“நாட்டுக்கு தீ வைத்து அழித்துவிட்டு அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டம் இடம்பெற்று வருகின்றது.” என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கண்டி குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “திரைப்படக் காட்சிகளை போன்றே இன்று இலங்கை அரசியலில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவை வெறும் நடிப்பு மாத்திரமே. இதனால் எவ்வித சேவைகளும் மக்களுக்கு இடம்பெற போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு எவரும் முன்னுரிமையளிப்பதில்லை. நாட்டை தீ வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் சூதாட்டமே நடைபெற்று வருகிறது.

83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று சில அரசியல் குழுக்கள் நாட்டுக்கு சேதங்களை விளைவித்தேனும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். எதிர்வரும் தேர்தல்களில் தெரிவாகும் ஜனாதிபதியும் பிரதமரும் யார் என்ற அரசியல் சூதாட்டம் அரங்கேற ஆரம்பித்துள்ளது. இது நாட்டுக்கு பெரும் பாதகமாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS