இலங்கை
Typography

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பல வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணுக்கு தெரியவில்லையா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளதாவது, “அவசரகால சட்டத்தால் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். தென்னிலங்கையை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன. இராணுவம் எங்களுடைய மாணவர்கள் அவர்களது புத்தகப் பைகளை சோதனையிடும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். இப்போதுள்ள தொழிநுட்ப வசதிகளை கொண்டு மாணவர்கள் ஐ.எஸ். எல்லாம் பற்றி தேடினால் அவர்களின் சிந்தனை என்னவாகும் ? இதையெல்லாம் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று ஞானசார தேரரை விடுதலை செய்ய உங்களால் முடியுமாயின், ஏன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது? இன்று இவர்களின் விடுதலைக்காக சட்டத்தரணிகளை நியமித்து வாதாட முடியாத நிலையில் கூட பலர் உள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் .

இந்த பிரச்சினைகளை காரணம் காட்டி இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இராணுவ நிலைகொள்ளல் தொடர்கிறது. இதனால் இப்படியான சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS