இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். 

பொது வேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும், நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பினை அடுத்து ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். இன, மத, மொழி, கட்சி பேதமின்றி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன். பொதுவேட்பளராக களமிறங்குவதா இல்லையா என்பது குறித்து தற்போது எனக்கு கூறமுடியாது.

எமது நாட்டினை வளமான எதிர்காலம் நோக்கி வலுவானதாக மாற்றியமைப்பதே எனது இலக்காக இருக்கின்றது. அதற்கான திட்டங்களும் என்னிடத்தில் உள்ளன. விசேடமாக, கல்வி, சுகாதாரம், தொழிவாய்ப்பு, வர்த்தகம், நிதி முகாமைத்துவம், முதலீடுகள், சுற்றுலா உள்ளிட்டவற்றை விரைவாக முன்னேற்றம் காணச்செய்வதற்குரிய சகல திட்டங்களையும் ஒருங்கே கொண்டிருக்கின்றேன்.

தற்போது நாட்டில் முப்பது அமைச்சுக்கள் காணப்படுகின்றன. இவற்றினை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது. அதற்குரிய கொள்கையமைப்புடன் கூடிய செயற்பாட்டு கட்டமைப்புக்களும் என்னிடமுள்ளன. அமைச்சுக்கள் மறுசீரமைப்பு குறித்த செயற்பாட்டு விடயங்கள் குறித்து யாராவது என்னிடத்தில் பகிரங்க வெளியில் வினாக்களை தொடுப்பதற்கு விரும்பினால் அவற்றுக்கு பதிலளிப்பதற்கு நான் எந்தநொடியிலும் தயாராகவே உள்ளேன்.

இந்த நாடு பன்மைத்துவத்தினைக் கொண்டதாகும். வடக்கு, கிழக்கு, மலையகம், உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் வெவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அமைச்சின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் வடக்கு மாகாண புகையிரத சேவைக் கட்டமைப்பினை காங்கேசன்துறை வரையில் கொண்டு செல்லும் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்குச் சென்று அந்த மக்களுடன் நெருங்கிப்பழகிய அனுபவங்கள் நிறைவே உள்ளன. அவர்களுக்கு விசேட தேவைப்பாடுகள் இருக்கின்றன. என்பதை நான் நன்கறிந்து கொண்டுள்ளேன். இவற்றையெல்லாம் முறையான செயற்பாடுகள் ஊடாக கையாளுகின்ற போது தீர்வுகளை பெறுவதொன்றும் கடினமான விடயமல்ல. ஆகவே அனைத்து பிரஜைகளினதும் தேவைப்பாடுகள் பற்றி செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளே அவசியமாகின்றன என்பதையும் நான் நன்கு அறிந்துள்ளேன். ஆகவே அந்த மக்களுக்காக, நாட்டுக்காக செயற்படுவதொன்றும் இயலாத காரியமாக நான் கருதவில்லை.” என்றுள்ளார்.