இலங்கை
Typography

ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முடியாதளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“அரபு நாடுகள் சிலவற்றில் ஐ.எஸ். அமைப்புக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது. எனினும், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவை ஏற்படுத்தினால் நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டு விடும்.” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்களை சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் அரசியல்வாதிகளான எம்மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதாயின் நாம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் முறையின் ஊடாக ஏற்படுத்த முடியாது. இதற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐ.எஸ். பயங்கரவாதம் தலைதூக்காமிலிருப்பதற்கு புதிய முறையொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்துள்ளோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவேதான் இரண்டு வாரங்களுக்குள் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளேன். உண்மைகளை நாட்டு மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தெரிவுக்குழுவின் சகல கலந்துரையாடல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகளை ஊடகங்களின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளோம்.

மதரஸாக்களை நிர்வகிப்பது பற்றிய சட்டவரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் தாமாக முன்வந்து இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுகின்றனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS