இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து செயற்படுகிறார் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதக் கோரிக்கைகள் ஊடாகவும் அவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால், ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில்கொள்ளவில்லை. இதில் அவர் பாராமுகமாகவே செயற்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுக்க முடியாது என்பதே எமது கேள்வியாகும். இதனால் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பல்வேறு தரப்பினராலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இருந்தும் இவை எவற்றுக்குமே செவிசாய்க்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்