இலங்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், மன்னார் மடு மாதா தேவாலயத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும், நுழைவதற்கு முன் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

மடு மாதா தேவாலயத்தின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை 03.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மன்னார் ஆயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மடு மாதாவின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 02ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழமை போல் இவ் வருடமும் ஆடி மாத திருவிழா நடாத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இன்றைய தினம் குறித்த மடு மாதாவின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூடி முடிவுகள் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக மடு திருத்தலத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மக்களும், பக்தர்களும் தயாராக வர வேண்டும். உங்களையும், உங்கள் உடமைகளையும் சோதனை செய்து தான் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதனை மனதில் வைத்து ஆடி மாத திருவிழாவிற்கு வர முடியும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.” என்றுள்ளார்.