இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதே விடயத்தை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராய்வது பொருத்தமற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் மீது இதுவரை ஐந்துக்கு மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் பாராளுமன்றத்தில் இவ்விடயத்தை ஆராய முடியாது என நிலையியற் கட்டளைச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நடைமுறையில் சட்டத்துக்கு புறம்பானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளபோதும், கருஜயசூரிய தனது சபாநாயகருக்குள்ள பொறுப்பை மறந்து எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் என்ற கனவில் செயற்பட்டு வருகின்றார் என்றும் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத் தெரிவுக்குழுவை பக்கச்சார்பான நாடகமாகவே நாம் பார்க்கின்றோம். இதன் செயற்பாடுகள் புத்தி சாதுரியமானவையாக எமக்குத் தெரியவில்லை. இதன் செயற்பாடுகளையிட்டு எமது கட்சி கவலையடைகின்றது

இழைக்கப்பட்ட தவறை அரசாங்கமாக பொறுப்பேற்பதை விடுத்து ஜனாதிபதி மீது மட்டும் குற்றம் சுமத்துவதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சதியாகவே சுதந்திரக் கட்சி இப்பாராளுமன்றத் தெரிவுக்குழுவை பார்க்கின்றது. முறையான விசாரணைகளுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியம் குறித்து நாம் முன்மொழிந்ததுடன் அதனை நியமிப்பதற்கு அவசியமான கையொப்பங்களையும் இட்டிருந்தோம். எனினும், இதனுடன் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் விசாரணைகளை உள்ளடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாம் நிராகரித்ததுடன் அதிலிருந்து விலகிக் கொண்டோம்.

தற்போது எதிர்க்கட்சியாகிய எமக்கு தெரிவுக்குழுவுடன் எவ்வித தொடர்பும் இல்லை. இது பக்கச்சார்பாக நடத்தப்படும் விசாரணை. அத்துடன் இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு இரகசியங்கள் யாவும் அம்பலத்துக்கு வருகின்றன. இது நாசகார செயலில் ஈடுபட காத்திருக்கும் ஏனைய அமைப்புக்களுக்கு சாதகமாக அமையக்கூடும்.” என்றுள்ளார்.