இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த நாசகார சம்பவத்தை திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கான பயிற்சிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளுக்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை நாடு கடத்தப்பட்ட பின்னர் விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர். 

சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரானுக்கு மிகவும் வேண்டப்பட்டவரான ஹயாது மொஹமட் அஹமட் மில்ஹான் அல்லது அபூ சிலன் (வயது 30) என்றழைக்கப்படுபவர் உள்ளிட்ட ஐந்துபேரே நேற்று அதிகாலை ஜித்தாவிலிருந்து யூ.எல் 242 விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

2018ஆம் ஆண்டு வவுணதீவில் வீதி பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டமை ஊர்ஜிதமானதையடுத்து அக்கொலையின் முக்கிய சூத்திரதாரியென தேடப்பட்டு வந்த சஹ்ரானின் மிக நெருங்கிய நண்பரான அஹமட் மில்ஹான் தலைமையிலான குழுவினரே சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் கொன்ஸ்டபிள்களின் கொலைகள் தொடர்பில் சஹ்ரானின் சாரதி உள்ளிட்ட இருவர் ஏற்கனவே குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அக்கொலையின் பிரதான சுத்திரதாரியான மில்ஹான் தற்போது சவூதியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மில்ஹான் தலைமையிலான ஐவரும் சஹ்ரான் உள்ளிட்ட குழுவினருக்கு தற்கொலை தாக்குதல் தொடர்பான நேரடி பயிற்சிகளை வழங்கி, தாக்குதல்களுக்கான திட்டங்களை வகுத்ததன் பின்னர் உயிர்த்த ஞாயிறுக்கு முதல் நாளன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு தப்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி ஐந்து சந்தேக நபர்களும் கடந்த மே மாதமளவில் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மில்ஹான், சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு பெருமளவு ஒத்துழைப்பு வழங்கி வந்தவரென்றும் அவர் புதிய காத்தான்குடி 02 இல் எப்.பி வீதி, இலக்கம் 45/5 எனும் முகவரியைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடன் மருதமுனை 03, சம்சம் விதி இலக்கம் 522 பி எனும் முகவரியைச் சேர்ந்த மொஹமட் மர்சூக் மொஹமட் ரிலா (34), வெல்லம்பிட்டி சாரா கார்டனைச் சேர்ந்த மொஹமட் மொஹிதீன் மொஹமட் சன்வாஸ்(47), காத்தான்குடி 01, கம்புரடி வீதியைச் சேர்ந்த மொஹமட் இஸ்மாயில் மொஹமட் இல்ஹாம்(29) மற்றும் கெபித்திகொல்லாவ எல்லவெவ பிரதேசத்தைச் சேர்ந்த அபூசாலி அபூபக்கர் (37) ஆகிய நால்வரும் மத்திய கிழக்கில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி ஐந்து சந்தேக நபர்களையும் சவூதியிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவந்தனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 102 பேர் தற்போது தடுத்து வைத்து விசாரணைக் குட்படுத்தப்படுகின்றனர்.

அதில் 77 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் 25 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினராலும் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு மேலதிகமாக நேற்று நாடுகடத்தப்பட்ட ஐவரும் தொடர்ந்தும் சிஐடி தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இவர்கள் ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து தெளஹீத் ஜமாஅத் அமைப்பை நிறுவி நாட்டில் பாரிய அழிவுகளை முன்னெடுப்பது தொடர்பான திட்டங்களைத் தீட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதில் இல்ஹாம் என்பவர் நீண்டகாலமாக நாட்டில் தங்கியிருந்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்தபோதும் ஆயுதப் பயிற்சி, குண்டுத் தாக்குதல், தற்கொலை தாக்குதல் ஆகிய அனைத்து பயிற்சிகளும் மில்ஹான் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS