இலங்கை
Typography

“எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கற்று கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டம் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

தங்காலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தின் இடைப்பட்ட பதவி காலத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களை மதிக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டின் காரணமாக ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சரவையினை கூட்டவில்லை. இதற்கு 19வது அரசியலமைப்பின் ஊடாகவே வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மை பழிவாங்கும் நோக்கத்தில் தூரமற்ற அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஏற்படும் எதிர்விளைவுகள் தொடர்பில் ஆராயாமல் அரசியலமைப்பின் 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு இத்திருத்தமே பிரதான காரணம். நிறைவேற்று துறைக்கும், சட்டவாக்க துறைக்கும் இன்று அதிகாரம் தொடர்பிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தேர்தலின் ஊடாகவே ஆட்சி மாற்றம் ஏற்படும். இடம்பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலே இடம் பெற்றிருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS