இலங்கை
Typography

19வது திருத்தச் சட்டத்தின் மூல வரைபு எந்தவிதமான மாற்றங்களுமின்றி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், அரசியலமைப்பு நெருக்கடிகள் நாட்டில் ஏற்பட்டிருக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். 

“ஆகவே, 19வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வெளியிடும் கருத்துக்கள் பொருத்தமற்றது. நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் 19வது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்ற தேவை கிடையாது. மாறாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை கொடுத்த வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி இரத்து செய்ய வேண்டும். அப்போதே ஒரு மக்களின் இறையாண்மை மதிக்கப்பட்டு ஒரு தேசிய கொள்கையின் கீழ் அனைவரும் உட்படுவார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 18வது மற்றும் 19வது திருத்தங்களினாலே அரசாங்கம் ஸ்தீரத்தன்மையினை இழந்துள்ளது. ஆகவே அவ்விரு திருத்தங்களும் நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜயம்பதி விக்ரமரட்ண மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பின் 18வது திருத்தம் எந்த நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. அரசியலமைப்பு விடயத்தில் அரசியல் தேவைகளையும், பக்கச்சார்பற்ற கருத்துக்களை துறந்து செயற்படுவதல் அவசியமாகும். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பிற்கு அமைய பாரிய போராட்டத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே அரசியலமைப்பின் 19வது திருத்தம் உருவாக்கப்பட்டது. அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமையின் பயனை தற்போது அனைவரும் பெற்றுக் கொண்டுள்ளோம்.இதனை ஒருபோதும் மறுக்க முடியாது. நீதித்துறையின் சுயாதீன தன்மையே இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூல வரைபியை முழுமையாக எவ்வித மாற்றங்களும் இன்றி நடைமுறைப்படுத்திருந்தால் அரசியலமைப்பினை மையப்படுத்தி எவ்வித நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்காது. எவரும் அரசியலமைப்பினை விமர்சித்திருக்கமாட்டார்கள். மூல வரைபில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் அரசியல் அதிகாரங்கள் ஒரு தரப்பினருக்கு சென்று விட கூடாது என்று ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் எதிர்த்தமையே.

அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு செல்கின்றது. ஆகவே 19வது திருத்தத்தின் மூல வரைபில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள். அமைச்சரவையிற்கு கூட்டு பொறுப்பு சொல்ல வேண்டிய பிரதமருக்கு அரசியல் அதிகாரங்கள் செல்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு தனிநபர் மீதே அனைவரும் செல்வாக்கு செலுத்தினார்கள்.

அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதாலும் , தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதியின் தரப்பினரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதாலும் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூல வரையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதுவே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்தால் பாராளுமன்றம் பலம் பெற்று மக்களாணை மதிக்கப்படும். அப்போது அனைவரும் ஒரு தேசிய கொள்கையின் கீழ் செயற்படுவார்கள்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்