இலங்கை

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகுச் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

எனினும், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் அமரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனதும் இந்தியாவுக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண செலவு மேலும் குறைவடையும். இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.” என்றுள்ளார்.