இலங்கை

“ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆகவே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அவரை அழைக்க வேண்டும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “19வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். அவருக்கு பாராளுமன்றத்தில் தனியான ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் ஜனாதிபதிக்கு பொறுப்பு கூறத் தேவையில்லை. எனவே அவரை விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் தெரிவுக்குழுவுக்கு வருவதை நிராகரிக்க முடியாது. அவரை அழைக்குமாறு எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.