இலங்கை

மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் 44 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள தவறு என்னவென மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். சிறைச்சாலைகளில் இருந்தே போதைப்பொருள் கடத்தல்கள் வழிநடத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகின்றது.

சாட்சியங்களுடன் இவை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு. பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக என்ன செய்ய போகின்றீர்கள்?. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களை பாதுகாத்து மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று எமது நாட்டில் புதிய வடிவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு உதவிப் புரிந்தவர்களுக்கு எதிராக மரண தண்டனையை வழங்குவதற்கும் இந்தக் குழுவே எதிர்ப்பை வெளியிடுகிறது. அன்று நாட்டை துண்டாட நினைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ பொறிமுறைகளை அன்றைய அரசாங்கம் வகுத்த போது புலிகளை அழிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கியிருந்தால் இலங்கையில் இன்று புலிகளின் பயங்கரவாதம் தொடர்ந்திருக்குமென தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.” என்றுள்ளார்.