இலங்கை

ஜனநாயக தேசிய கூட்டணியை உருவாக்குவதற்கு அவசியமான யாப்பைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தயாரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் மீண்டும் வலியுறுத்தினார். 

எமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிப்பதற்கு முன்னர் கூட்டணியின் உத்தரவாதம் முக்கியமானதென கூறியுள்ள பிரதமர், கூட்டணியின் யாப்பை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டணி குறித்தும், வேட்பாளர் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், இன்னும் காலத்தை இழுத்தடிக்காமல் கூட்டணியின் யாப்பை துரிதமாக நிறைவு செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியை முன்னிலைப்படுத்தி புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு உடன்படிக்கை கைச்சாத்திடவும், கூட்டணியின் வேட்பாளரை அறிவிப்பதற்கும் முன்னதாக இந்தக் கூட்டணிக்கான யாப்பு நகலை தயாரிக்க வேண்டும். இந்த யாப்பு தொடர்பில் திருத்த யோசனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்ட நிலையில் ஒருவாரம் கடந்த நிலையிலும், அது குறித்து உரிய கவனம் செலுத்தப் படவில்லை.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய யாப்பு நகலை தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐ.தே.க. தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவார காலம் கடந்த நிலையிலும் யாப்பு நகலைக் கூட தயாரிக்க முடியாத நிலை குறித்து கவலைப்படுகின்றேன்.

இனிமேலும் தாமதப் படுத்தாமல் உடனடியாக யாப்பு நகலைத் தயாரித்ததுடன் உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து உடனடியாக தீர்மானிக்க முடியும், அத்துடன் அதனடிப்படையில் எமது கூட்டணி வேட்பாளர் யாரென்பதையும் அறிவிக்க முடியும்.” என்றுள்ளார்.