இலங்கை
Typography

'ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இலங்கையில் வாழ வேண்டும் என்கிற வாதத்தை கைவிட வேண்டும். இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தாலே நாட்டை கட்டியெழுப்ப முடியும்' என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

நீர்கொழும்பு, போலவலான சாந்த பெனடிக் தனியார் கல்விக் கல்லூரியின் 16வது வருட பரிசளிப்பு விழாவில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘எமது நாடு தற்போது பாரிய அச்சுறுத்தல்களுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றது. இதனை நாம் பொருட்படுத்தாமல் இருந்தால் மேலைத்தேய ஆதிக்கத்துக்கு நாம் ஆட்கொள்ளப்படுவோம். இதிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாப்பது எமது அனைவரினதும் கடமையாகும்

தனியொரு மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஒரு போதும் மேற்கொள்ள முடியாது. சகல மதத்தவர்களையும் மதித்து அவர்களுடன் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்றினாலே தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அடுத்த இனங்களைச் சார்ந்த மக்களைப் பிரித்துப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அடுத்த மதங்களைச் சார்ந்தவர்களையும், அடுத்த இனங்களைச் சார்ந்தவர்களையும் வேறு பிரித்துப் பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றோம். இவைகள் மிகவும் தவறானவை. இதனை விட்டு விட வேண்டும். இவற்றைத் தவிர்த்து ஒற்றுமைப்பட்டாலே அந்நிய நாட்டைச் சார்ந்தவர்கள் எம்மை நோக்கி விரல் நீட்டுவதிலிருந்து தப்பிக்க முடியும். இது எமது நாடு. ௭மது தேசம். இதனை நாமே பாதுகாக்க வேண்டும். சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொள்ள வேண்டும்.’ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்