இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திசாநாயக்க நீக்கப்பட்டுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்னவுக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதன் முதலாவது மாநாட்டை நடத்தியிருந்தது. இதில் அக்கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சியின் விதிமுறைகளை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.