இலங்கை

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், எதிர்வரும் வாரங்களில் புதுடில்லி செல்லவுள்ளனர். 

இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசியதாகவும் தங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தமைக்கு அமைய விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்று இந்தப் பயணத்தின் போது வலியுறுத்துவோம் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.