இலங்கை

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் நிதி மோசடி குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக இலங்கைக்கு இன்டர்போல் உதவ வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இன்டர்போல் வழங்கிய பதக்கத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக்கிடம் கோரிக்கை விடுத்தார்.

அந்தவகையில், புதிய போதைப்பொருள் கண்காணிப்பு கருவிகளை வழங்குவதற்கும் போதைப்பொருள் கடத்தல் வழிகளை அடையாளம் காண்பதற்கு நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடலாம் என இன்டர்போல் பொதுச்செயலாளர் கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, படையினர் மற்றும் உளவுத்துறை பிரிவினர் எடுத்துள்ள நடவடிக்கைகளை இன்டர்போல் பொதுச் செயலாளர் பாராட்டியுள்ளார்.